சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு வருவாய் ஆய்வாளர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தில் துணை கலெக்டராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் அர்த்தனாரி என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு கண்டபடி திட்டினார்.
'ஆபிசுக்கு நேரில் வந்தால் சுடுகாடு ஆக்கிவிடுவேன். நீயும் ஒரு பொம்பளைதானே ஆபீசை இழுத்து மூடி சீல் வைத்து விடுவேன். அதிகாரியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீயா'.... என்று மிரட்டல் தொனியில் பேசினார். .இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி இதுகுறித்து உயரதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.இதற்கிடையே, அர்த்தனாரி பெண் அதிகாரி சாந்தியை மிரட்டிய ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் கணக்கு விவரங்களை 5 - ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தாலுகா அலுவலகங்களுக்கு சாந்தி உத்தரவிட்டிருந்தார்.ஆனால், இலக்கியா என்பவர் இந்த மாதம் 12- ஆம் தேதி ஆகியும் கணக்கு விவரங்களை தரவில்லை . இதனால், துணை கலெக்டர் சாந்தி ,அந்த பெண் ஊழியரை கண்டித்துள்ளார். சேலம் வட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அர்த்தனாரியிடம் இலக்கியா இது குறித்து புகார் கூறியுள்ளார். அதன் பேரில், அர்த்தனாரி துணை கலெக்டர் சாந்தியை மிரட்டியுள்ளார்.
பெண் அதிகாரியை திட்டிய அர்த்தநாரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.