திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பணியாளர்கள் 3 பேர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
கண்ணாரப்பேட்டை என்ற இடத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் , ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் விற்பதற்காக எடுத்து வரப்பட்டிருந்த 215 நெல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
விசாரணையின் முடிவில், நெல் கொள்முதல் பணியாளர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்த ராஜ், கனக ராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, கண்ணாரப் பேட்டை நெல் கொள்முதல் நிலையத்திற்கு அருகே குளக்கரையில் 10 சாக்கு மூட்டை பண்டல்கள் தண்ணீரில் நனைந்து கிடந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.