சென்னையில் 23 ஆண்டுகளாக தியாகிகள் பென்ஷன் கேட்டு அலைந்து கொண்டிக்கும் 99 வயது முதியவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், தங்களது செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும் 99 வயதான கபூர் என்ற அந்த முதியவருக்கு பூர்வீகம் விருதுநகர் மாவட்டம் என்று கூறப்படுகிறது.
பர்மாவுக்கு பஞ்சம் பிழைக்கச் சென்ற தமது பெற்றோரை பார்க்க ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளின் தொடக்கத்தில் அங்கு சென்ற கபூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் சேர்ந்துள்ளார்.
சுமார் 5 ஆண்டுகாலம் நேதாஜி படையில் துப்பாக்கி சுடும் வீரராகப் பணியாற்றியதாகக் கூறும் கபூர், 2 ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்து இருக்கிறார்.
சுதந்திரத்துக்குப் பின் அகதியாக மீண்டும் தமிழகம் வந்த கபூருக்கு சென்னை வியாசர்பாடியில் சிறிய அளவில் ஒரு வீடும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தெருத்தெருவாக பனியாரம் விற்பது உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த கபூருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் பிறந்துள்ளனர்.
தற்போது அனைவருமே கூலி வேலை செய்து வரும் நிலையில், அரசு கொடுத்த ஓட்டு வீட்டில் மூத்த மகளுடன் வசித்து வருகிறார் கபூர்.
கடந்த 1997ஆம் ஆண்டு தியாகிகள் ஓய்வூதியத்துக்காக விண்ணப்பித்த கபூரின் விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி பரிந்துரை வழங்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் 23 ஆண்டுகளாக தனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் கபூர், பென்ஷன் வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.