கொரோனா நோயாளிகளுக்கு எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கபசுரக்குடிநீர் வழங்கப்படுகிறது என விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர், தான் கண்டுபிடித்த IMPRO என்ற மருந்தை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை அறிவிக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆண்டு தோறும் சித்த மருத்துவத்துக்கு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கக் கூடிய சூழலில் முறையான ஆராய்ச்சி எதுவும் நடைபெறுகிறதா என நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுவதாகவும் அதன் அடிப்படையில் தான் அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுவதாகவும், ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்தப்பின் முறையாக அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எப்போது இருந்து கபசுர குடிநீர் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, எத்தனை நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் என்று வினவிய நீதிபதிகள், கொரோனா மருந்தை கண்டுபிடிக்க பல கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் சூழலில் சித்த மருந்துகளை ஊக்குவிக்கலாமே என கருத்து தெரிவித்தனர்.
மேலும், சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன, என்னென்ன நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பன குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.