தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வேலூர் மண்டல தலைமை இணை செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3கோடியே 25லட்சம் ரூபாய் ரொக்கம், 450 சவரன் நகைகள், ஆறரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 90க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
வேலூர் காட்பாடியில் உள்ள மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் பன்னீர்செல்வம் (51). புதிய கம்பனி தொடங்குவதல், விரிவாக்கம் செய்தல் மற்றும் பெயர் மாற்றுவதற்குப் பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் தேவை. இந்தப் பணிகளுக்கு முறைகேடாக பன்னீர் செல்வம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் போலீசார் பன்னீர் செல்வத்தைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டனர். அதனால், பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர். அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவரைப் பின்தொடர்ந்து காட்பாடியில் உள்ள அவரது வாடகை வீட்டில் சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் கணக்கில் வராத 33 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ராணிப்பேட்டை அருகே, பாரதி நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கட்டுக்கட்டாகக் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாயும், 2 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், பன்னீர் செல்வம் லஞ்சம் பெறுவதற்காகவே தனி வீட்டை வாடகைக்கு எடுத்து, தனி அலுவலகம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பன்னீர்செல்வத்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்..!