கடலூர் அருகே தோனியின் டைஹார்ட் ஃபேன் ஒருவர் தன் வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிறத்து மாற்றி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்திலும் தோனிக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணனை தோனியின் பக்தர் என்றே சொல்லலாம். துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர், தோனி மீதான அன்பை வெளிப்படுத்த தன் வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி நிறமான மஞ்சற் நிறத்து மாற்ற முடிவு செய்தார். இதையடுத்து, ரூ. 1.5 லட்சம செலவில் தன் வீட்டை மஞ்சள் நிறத்துக்கு மாற்றினார். வீட்டின் சுவர்களில் தோனியின் உருவப்படங்களும், விசில் போடு என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளன.
தோனி மீதுள்ள அன்பின் உச்சக்கட்டமாக வீட்டின் முகப்பில் home of dhoni fan என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தொடர் தோல்விகளை கண்டுள்ளதால், தோனியையும் அவரின் குடும்பத்தினரையும் கூட சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால், 'வென்றாலும் வீழ்ந்தாலும் தோனிதான் எங்கள் தல' என்று நிற்கும் கோபிகிருஷ்ணன் போன்ற ரசிகர்கள்தான் தோனியின் பலமும் உத்வேகமும் கூட என்றால் மிகையில்லை. திட்டக்குடி சுற்றுவட்டார மக்களை தோனியின் ரசிகர் கட்டிய இந்த வீட்டை வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து , கோபிகிருஷ்ணன் கூறுகையில், அர்ப்பணிப்புணர்வுடன் விளையாடும் தோனிதான் எப்போதுமே கிரிக்கெட் உலகின் தல என்கிறார்.