தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 25 ஆம் தேதிக்கு பின்னர் தொடங்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பசுபிக் கடலில் லா நினோ நிகழ்வு நிகழ்ந்து வருகிறது என்றார்.
இதனால் தென்மேற்கு பருவகால நிலை தொடர்வதாகவும், வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, தென்னிந்திய கடற்பரப்பை கடந்து செல்லும் நிலை உருவாகுவதாகவும் அவர் கூறினார்.
வருகிற 22 ஆம் தேதி வரை மேற்கு திசை காற்று வீசும் என்றும், வருகிற 25-ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே சென்னையின் ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர்,தாம்பரம், கிழக்கு கடற்கரை சாலை, மற்றும் காஞ்சிபுரத்தில் நல்ல மழை வெளுத்து வாங்கியது.