நடிகை குஷ்பூவை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நடிகையாகப் பார்த்தார்களே தவிர, அரசியல் கட்சித் தலைவராகப் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
“நடிகை குஷ்பூ கடந்த ஆறு மாத காலமாகவே கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார், விசுவாசத்தை மாற்றிக் கொள்வது அவருடைய சொந்த விஷயம். ஆனால், காங்கிரஸ் கட்சி அவருக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்தது. அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்ற மிகப்பெரிய பதவியையும் அந்தஸ்தையும் கொடுத்தார்கள். அதிலேயே குஷ்பூவுக்கு திருப்தி வரவில்லை என்றால், அவரைக் கையாள்வது என்பது மிகவும் கடினம்.
மாற்றம் தவிர்க்க முடியாது என்று அவர் சொல்வது பாரதிய ஜனதா கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார் என்பதையே காட்டுகிறது. இந்த குணத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி கொடுத்தது போன்ற மரியாதையை அவரால் வேறு எங்கும் பெற முடியாது. பிற்காலத்தில் குஷ்பூ தவறை எண்ணி வருத்தப்படுவார், குஷ்பூ காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றதால் எங்கள் கட்சிக்கு ஒரு காலத்திலும் இழப்பு கிடையாது, தாமரை இலை தண்ணீரைப் போலத் தான் அவர் இங்கு இருந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரை ஒரு நடிகையாகத் தான் பார்த்தார்கள். அரசியல் கட்சித் தலைவராக அவரை அவரை பார்த்தது கிடையாது.
பாரதிய ஜனதா கட்சி குஷ்பூவை விரும்பி கூப்பிடவில்லை. அப்படிக் கூப்பிட குஷ்பு முக்கியமான ஒருவரும் இல்லை, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்கு குஷ்பூ வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க வுடன் பேரம் படியாததால், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.