கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை நகைக்கடை ஊழியர் ஒருவர் கிழித்து எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை தேர்முட்டி பகுதியில், பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரே உள்ள சுவரில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதே பகுதியில் நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் தினேஷ் என்பவர், ஆபாசமாக இருந்த அந்த போஸ்டர்களை ஆவேசமாகக் கிழித்து எரிந்தார். தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் இரண்டாம் குத்து திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் ஒன்று வெளியானது. ஆபாச காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட டீசராக அது அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட டீசரை வெளியிட்டதற்குப் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இரண்டாம் குத்து திரைப்படம் குறித்து கோவை பெண்கள் மேல்நிலை பள்ளி எதிரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை நகைக் கடை ஊழியர் ஒருவர் கிழித்தெறியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.