இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக விதைத்துள்ளனர். இது தவறான நடைமுறையாகும் என்று நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த மதுரேசன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர்.பதக்கம் வெல்வோகருக்கு ரூ. 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ரொக்கப்பரிசாக மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசு ரூ. 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு அளிக்கிறது.
பொதுவாக, ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ. 30 லட்சம் முதல் 75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மாநில அரசு தரப்பில் ரூ. 50 லட்சம் முதல் 2 கோடி வரை வழங்கப்படுகிறது. அனைத்துவிதமான விளையாட்டு வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. சட்டப்படி அனைத்து விதமான விளையாட்டு வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும்.
ஹரியானா மாநில அரசு சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களை அங்கீகரித்துள்ளது. வேலை வாய்ப்பு, ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. அதுபோல், தமிழகத்திலும், சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், சரிசமமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, ‘‘இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். இது தவறான நடைமுறையாகும். மனிதனின் ஆரோக்கியத்தை காக்கும் வகையான பல விளையாட்டுகள் உள்ளன. கபடி, கால்பந்து, ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளும் சிறப்பானலை. அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும். பிற விளையாட்டுகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்’’ என கருத்து தெரிவித்தது.
தொடர்ந்து, விசாரணையை அக்டோபர் 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.