கறிக்கடைகளுக்கு ஆடுகளை திருடி ரூ. 2 ஆயிரத்துக்கு விற்று மது குடித்து ஜாலியாக திரிந்த கும்பலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். காய்கறி வியாபாரியான இவர் ஆடுகளை வாங்கி விற்றும் வந்தார்.கடந்த வாரத்தில் தன் வீட்டு முன் இரண்டு ஆடுகளை கிருஷ்ணன் கட்டியிருந்தார் .மறுநாள் காலையில் பார்த்தபோது ஆடுகளை காணவில்லை . நள்ளிரவில் யாரோ திருடி சென்று இருப்பது தெரியவந்தது. தனது ஆடுகளை மீட்டுத்தருமாறு சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, பொன்னம்மாப்பேட்டை மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு திருட்டில் ஈடுபடுவரோ கண்காணித்து வந்தனர். அப்போது ள் மினி லாரியில் வந்த இளைஞர்கள் வீடுகள் முன்பு கட்டியிருக்கும் ஆடுகளை திருடிச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து விசாரித்ததில் உடையாப்பட்டியை சேர்ந்த தீபன் ராஜ் ( வயது 21) அல்லிகுட்டை பகுதியை சேர்ந்த கமலகண்ணன்(வயது 29 ), பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த பாபு (வயது 30 ) என்பது தெரிய வந்தது.
கைதான மூன்று பேரும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். மூன்று பேரும் மதுவுக்கு அடிமையானவர்கள். இதனால், இரவு நேரங்களில் மினி லாரியை வாடகைக்கு எடுத்து அவர்களே ஓட்டி சென்று ஆடுகளை திருடி ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள ரூ. 2 ஆயிரத்துக்கும் விற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.