திண்டுக்கலில் சலூன் கடை உரிமையாளர் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரது 12 வயது மகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கைதான கிருபானந்தன் என்பவரை போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து நீதி கிடைக்கச் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மதுரை:
இதனிடையே சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரை மாநகர் முழுவதும் உள்ள சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட சலூன் கடை உரிமையாளர்கள், சிறுமியை படுகொலை செய்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 500 சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் எனக் கூறி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட சலூன் தொழிலாளர்கள், சிறுமி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கு குறித்து உரிய ஆய்வு செய்து உடனடியாக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பங்குபெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.