கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்து கொண்ட மணப்பெண்ணையும், அந்த பெண்ணின் தந்தையையும் நாளை நேரில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெண் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்காததால் தனது குடும்பத்தினர் முன்னிலையில் எம்.எல்.ஏ பிரபு காதலியை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் தனது மகளை எம்.எல்.ஏ பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாகவும், தனது மகளை மீட்டு தரக் கோரியும், சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
படிக்கும் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி எம்.எல்.ஏ. பிரபு கடத்தி சென்றுவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது.
வழக்கை பட்டியலிடும் படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வராதததால் மீண்டும் முறையிடப்பட்டது.
இதையடுத்து நாளை சம்பந்தப்பட்ட பெண்ணையும், மனுதாரான அவரது தந்தையையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.