கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது மகளை கடத்தி சென்று விட்டதாகக் கூறி, அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என பெண்ணின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியின் அதிமுக எம்எல்ஏ பிரபு சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவியை நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாக துருகத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், அவரிடம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி கடத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.