கொரோனா பாதுகாப்புக்காக அணியப்படும் என்.95 முகக்கவசத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய கில்லாடி பிடிபட்டார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கரிபுரம் விமான நிலையத்துக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று ஒரு விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பயணி கொரோனா பரவல் தடுப்புக்காக முகத்தில் அணிந்திருந்த முகக்கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதாவது, என்.95 வகை முகக்கவசத்தில் காற்று உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள துளையின் உட்புறமாக தங்கத்தை பதுக்கி வைத்து கடத்தி வந்துள்ளார்.
விசாரணையில், பிடிபட்டவர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் பட்கலை சேர்ந்த அமீர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுவாக ஷூ, சூட்கேஸ், குக்கர், டார்ச்லைட் உள்ளிட்ட பொருள்களில் தங்க கடத்தி வருவது வழக்கம். தற்போது, முகக்கவசத்தில் கூட தங்கம் பதுக்கி கொண்டு வந்த வந்த சம்பவம் சற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.