விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடலை அச்சு பிசகாமல் அழகாக பாடி பிரபலமடைந்தவர் பாடகர் திருமூர்த்தி கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அந்த கொரோனா மையமே கவலையை மறைந்து களை கட்டத் தொடங்கியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிபட்டி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி பிறவியிலேயே கண் பார்வை இல்லாத மாற்று திறனாளி. இவரின் தாயார் கடந்த ஆண்டு நீரிழிவு நோயால் உயிரிழந்தார் . பிறவியிலேயே பார்வை இல்லை என்றாலும் திருமூர்த்திக்கு அபார குரல் வளம் உண்டு. தாயை இழந்த நிலையில் நொச்சிப்பட்டி கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக வளரும் திருமூர்த்தி கொட்டங்குச்சி , பாத்திரங்கள், குடம் போன்றவற்றிலேயே இசையமைத்து பாடல்களை பாடுவதில் அபார திறமை கொண்டவர்.
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை திருமூர்த்தி அபாரமாக பாட, அருண்குமார் என்பவர் தனது செல்போனில் பதிவு செய்து அஜித் ரசிகர் மதன்குமார் என்பவருக்கு அனுப்பி வைத்தார். பெங்களூரில் பணி புரியும் மதன்குமார் அந்த பாடலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட அது வைரலானது.
சமூக வலைதளத்தில் டிரென்டான அந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் இமான் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு இமான் தன் இசையில் செவ்வந்தியே என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார். பாடலும் சூப்பர் ஹிட்டானது. இதற்கிடையே, கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கடந்த 6 மாத காலமாக வெளியில் செல்ல முடியாமல் திருமூர்த்தி வீட்டிலியே முடங்கி கிடந்தார்.
வீட்டிலேயே இருந்தாலும் திருமூர்த்தியை கொரோனா விட்டு விடவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் அங்கு தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்போது, கொரோனா மையத்தில் தன் பாடும் திறமையால் அங்கு சிகிச்சையிலிருக்கும் மக்களின் கவலையை மறக்க செய்யும் பணியில் தன்னை திருமூர்த்தி ஈடுபடுத்திக் கெண்டுள்ளார். இதனால், கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கவலையை மறந்து உற்சாகமாக உள்ளனர். திருமூர்த்தி திறமையை கண்டு அசந்து தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.