அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தமிழக அரசு உத்தரவை எதிர்த்து தாக்கலான மனுவிற்கு அளித்துள்ள பதிலில், கொரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதி பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் எனவும், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.