நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில், தனியார் பங்களிப்புடன் கூடிய செயல்திறன் அளவீட்டு முறையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவங்கப்பட்ட திட்டத்தின் மூலம், வீடுகள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு முறைப்படி பெறப்படுவதோடு, அனைத்து திடக்கழிவுகளையும் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லாமல் நவீன தொழில்நுட்ப முறையில் மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தவிர்க்க முடியும்.
முதற்கட்டமாக அடையார், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 7 மண்டலங்களில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் மூலம், 16,621 தெருக்களில் உள்ள குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
8 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 447 கோடி ரூபாய்க்கு, தனியார் நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு சென்று குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 100 சதவீத ஈ - ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுவதோடு, 7 மண்டலங்களிலும் 300 கனரக மற்றும் இலகுரக வாகனங்களுடன், பேட்டரிக்களால் இயங்கும் 3000 வாகனங்களும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விலங்குகளின் உயிரற்ற உடல்கள், பழத்தோட்டக் கழிவுகள், பெருமளவிலான தேவையற்ற பொருட்களை அகற்ற தனி வாகனம் பயன்படுத்தப்படும் எனவு கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நோய் தொற்று காலத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒளிவிளக்கே என அழைப்பு விடுக்கப்பட்டது.