தமிழகத்தில் தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, உணவகங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படவும், பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளில் ஒரே சமயத்தில் 100 பேருக்கு மிகாமல் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 50 விமானங்கள் வந்து செல்லும் நிலையில் இனிமேல் 100 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கும் அரசாணை, மாணவர்களின் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாட்டிற்கான தடை தொடர்கிறது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர வெளிநாட்டு விமான போக்குவரத்து மற்றும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதம், அரசியல், பொழுது போக்கு கூட்டங்களுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையங்குகள், நீச்சல்குளம், பொழுது போக்கு பூங்கா,பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளுக்கான தடை தொடர்கிறது. கடற்கரை, உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம், சுற்றுலா தலங்களுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.