சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய மோசடி கும்பலின் தலைவன் உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல நிதி நிறுவனங்களின் பெயரிலும், காப்பீட்டு நிறுவனங்களின் பெயரிலும் பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு , குறைந்த வட்டியில், ஒரே நாளில் வங்கி கடன் என ஆசை வார்த்தை கூறி ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்களை வாட்ஸ் அப் மூலம் பெற்று அவர்களது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் திருடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இது போன்ற மோசடிகள் சமீபமாக அதிகரித்து வரும் நிலையில், அதில் தொடர்புடைய மோசடி கும்பலும் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றன.
இருப்பினும் புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களது விசாரணையை தீவிரபடுத்தினர்.
இதில் திருமுல்லைவாயலில் மிகப்பெரிய மோசடி கும்பல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்தியபோது பட்டாதாரி இளம் பெண்களை பணியில் அமர்த்தி கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்தோரிடம் பொதுமக்களிடம் எப்படி மோசடி செய்கிறார்கள் என நடித்து காண்பிக்கக்கூறி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதையடுத்து அங்கிருந்த மோசடி கும்பலின் தலைவன் ஜே.எஸ்.ஆர். கோபி, மற்றும் முக்கிய நிர்வாகிகளாக பணியாற்றிய வளர்மதி, அவரது கணவர் ஆண்டனி உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் ஜே.எஸ்.ஆர். கோபி உள்ளிட்டோர் கடந்த ஆண்டு சென்னையில் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் போலி கால் சென்டர் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
பின்னர் குண்டர் தடுப்பு காவலில் ஒரு வருடம் சிறையில் இருந்த நிலையில், மீண்டும் வெளியில் வந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்த கும்பலை சுட்டிக்காட்டி, வங்கி கடன் பெற்று தருவதாக செல்போன் மூலம் யார் தொடர்பு கொண்டாலும், அவர்களிடம் பொதுமக்கள் எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.