சத்தியமங்கலத்தில் கரும்பு ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து யானைகள் கரும்பை வயிராற சாப்பிட்டு விட்டு மீண்டும் காட்டுக்குள் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக 24 மணி நேரமும் லாரி போக்குவரத்து இருக்கும். காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது வழக்கம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து இன்று காலை கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, குட்டியுடன் வந்த காட்டு யானைகள் கரும்பு லாரியை வழிமறித்தன.
இதனால் , அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை சாலையின் நடுவே நிறுத்தினார். பின்னர், கும்பலின் மூத்த யானை லாரியின் மேல்பகுதியில் அடுக்கி வைத்திருந்த கரும்பினை தும்பிக்கையால் பறித்து தின்றதோடு குட்டி யானைக்கு கரும்பு துண்டுகளை கொடுத்தது. லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் அச்சத்தில் உறைந்த படி லாரியில் அமர்ந்தபடி இந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் லாரியை வழிமறித்து கரும்பை கபளீகரம் செய்த யானைகள் பின்னர் வயிறு நிறைந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், நிம்மதி பெருமூச்சு விட்ட ஓட்டுநரும் , கிளீனரும் தலை தப்பினால் தம்பிராண் புண்ணியம் என்று தப்பித்து ஓடியே விட்டனர். இந்த யானைகள் லாரியையோ அல்லது ஓட்டுநரையோ தாக்க முயலவில்லை கரும்புகளை மட்டும் சுவைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது,