செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழைய சீவரம் பகுதியை சேர்ந்தவர் இன்பரசன் ( வயது 29 )இவர் சென்னை புழல் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் , இன்று காலை அவரது செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது . அழைப்பின் பேரில் பழைய சீவரம் புத்துக்கோயில் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலூர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ,அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் என்பவரது மகன் ராஜன் என்பவருக்கும் இன்பரசனுக்கும் ஏற்கனவே தகராறு இருப்பது தெரிய வந்தது.
எனவே, முன் விரோதம் காரமணாக இன்பரசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றன. பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.