வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழுக்கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கொரோனா தடுப்புப் பணிகள், நிவாரணப் பணிகள் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியைத் தமிழகத்துக்கு வழங்கவும், ஜிஎஸ்டியில் தமிழக அரசுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என்றும், நீட் தேர்வு முறையைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது வரும் 7ந் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.