நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி இரு பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாசலம் என்பவரது மகன் நம்பிராஜன் . இவர், அதே ஊரை சேர்ந்த தங்க பாண்டியன் என்பவரின் மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போது காதல் திருமணத்தால் நம்பிராஜன் குடும்பத்தினருக்கும் தங்கபாண்டியன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதமாகியுள்ளது. நம்பிராஜன் வான்மதி தம்பதி நெல்லை டவுனில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி நம்பிராஜன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி மற்றும் உறவினர்கள் செல்லத்துரை , முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நம்பிராஜன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நம்பிராஜன் கொலை வழக்கில் தொடர்புடைய செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் மற்றும் அவரின் நண்பர் சுரேஷ் ஆகியோர் நாங்குநேரியில் வெட்டி கொலை செய்யப்பட்டனர் .
இந்த கொலை வழக்கு தொடர்பாக நம்பிராஜனின் அண்ணன் ராமையா , தாய் சண்முகத்தாய் மற்றும் சங்கர் , இசக்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மறுகால் குறிச்சியில் உள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர். ராமையா, உறவினர்கள் சுரேஷ், இசக்கி ஆகியோர் இன்று வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். சண்முகத்தாய் அவரின் கணவர் அருணாச்சலம் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர் . பக்கத்து வீட்டில் இசக்கியின் மனைவி மகள் சாந்தி வசித்து வருகிறார் .
இந்நிலையில, முகமூடி அணிந்து வந்த 12 பேர் கொண்ட மர்ம கும்பல் முதலில் சாந்தி வீட்டுக்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. பிறகு, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது. தொடர்ந்து அருகிலிருந்த சண்முகத்தாய் வீட்டு மீதும் வெடிகுண்டுகளை அந்த கும்பல் வீச,அ ருணாசலம் வீட்டில் இருந்து தப்பியோடிவிட சண்முகத்தாய் சிக்கிக் கொண்டார். சண்முகத்தாயையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு ஒடி விட்டு அந்த கும்பல் ஓடி விட்டது. சாந்தியின் மகள் தமிழ்செல்வி படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நாங்குநேரிக்கு சென்று விசாரணை நடத்தினர் . கொலையான இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி டோல்கேட் சிசிடிவி கேமரா கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை காரணமாக மறுகால் குறிச்சியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . காதல் திருமணத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொடர் பழிக்கு பழியாக நடக்கும் கொலைச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் உலுக்கி எடுத்துள்ளது.