விருதாச்சலம் அருகே கணேசன் என்ற வாலிபரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் குடும்பத்தினர் டி.எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாசலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் - முருகவேணி தம்பதியின் மகன் கணேசன். இரு வருடங்களுக்கு முன்பு கணேசன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக, கணேசன் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதற்கிடையே, மனம் திருந்திய கணேசன் திருட்டுத் தொழிலை கை விட்டு ஹோட்டலில் பணி புரியத் தொடங்கியுள்ளார். இது பொறுக்காத போலீஸார் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தனர். திடீரென கணேசன் வீட்டுக்கு சென்ற விருதாச்சலம் தனிப்படை போலீஸார் அவரை, கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர்.
மேலும், வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் கணேசன் 5 பவுன் தங்க நகை கொண்டு வந்து தர வேண்டுமென்று போலீஸார் கூறியதாக சொல்லப்படுகிறது. கணேசனின் தாயார் முருகவேணி, 'தன் மகன் திருந்தி வாழத் தொடங்கியுள்ளான். அவனை ஏன் துன்புறுத்துகிறீர்கள், விடுதலை செய்யுங்கள்' என்று காவல்துறையினரிடத்தில் மன்றாடியுள்ளார். ஆனால், போலீஸார் கணேசனை விடுவிக்க மறுத்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த முருகவேணி தன் உறவினர்கள் சிலருடன் விருதாச்சலம் டி.எஸ்.பி அலுவலகத்துக்கு வந்தார். அங்கே, திடீரென்று தன் மகனை போலீஸார் நிம்மதியாக வாழ விடவில்லை என்று கோஷமிட்டவாரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அங்கிருந்த போலீஸார் போராடி அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
திருந்தி வாழ முயற்சிப்பவர்களை போலீஸாரின் செயல் மீண்டும் திருட்டுத் தொழிலில் தள்ள வைத்து விடுவதாக கணேசனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.