விழுப்புரம் அருகே உள்ள சோழம் பூண்டி கிராமத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை மாற்றுதிறனாளி சிறுவன் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த சோழம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பிரியன் - சகுந்தலா தம்பதியின் மகள் பிரியதர்ஷினி. 13 வயதான பிரியதர்ஷினி அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த வாழ்முனி என்பவரின் வாய் பேசமுடியாத 16 வயது மகன் சீனிவாசன் என்பவன் சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளி பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளான். கொரோனா காரணமாக தற்போது ஊரில் பெற்றோருடன் சீனிவாசன் வசித்து வந்தான். அப்போது, சிறுமி பிரியதர்ஷினியிடத்தில் சீனிவாசன் பழக தொடங்கியுள்ளான். நாளடைவில் , காதல் கத்தரிக்காய் என்று சிறுமியிடத்தில் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளான். இது குறித்து, பிரிதர்ஷினி தன் பெற்றோரிடத்தில் கூற அவர்கள் சீ‘னிவாசனின் பெற்றோரிடத்தில் கூறி, பையனை கண்டித்து வைக்குமாறு எச்சரித்துள்ளனர். ஆனாலும், சீனிவாசன் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
இதற்கிடையே , சிறுமி பிரியதர்ஷினி சீண்டநாள்களாக புது சைக்கிள் வாங்கித் தருமாறு பெற்றோரிடத்தில் கேட்டு வந்துள்ளார். நேற்றுதான் அவரின் பெற்றோர் புது சைக்கிள் ஒன்றை பிரியதர்ஷினிக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். பெற்றோர் வேலைக்கு சென்று விட சிறுமி பிரியதர்ஷினி மகிழ்ச்சியுடன் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். பிறகு, மதியம் வீட்டில் பிரியதர்ஷி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த சிறுவன் சீனிவாசன், பிரியதரிஷினியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். சிறுமி மறுக்கவே ஆத்திரமடைந்த சீனிவாசன், தான் கையோடு எடுத்து வந்த கத்தரிக்கோலை எடுத்து பிரிதர்ஷினியின் கழுத்தில் குத்தியுள்ளான்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்து போனார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் வந்த போது, சிறுவன் கையில் கத்தரிக்கோலுடன் அங்கே நின்றுள்ளான். பிடிக்க முற்பட்ட போது, தப்பித்தும் விட்டான். தகவல் கிடைத்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊருக்கு ஒதுக்குபுறத்தில் பதுங்கியிருந்த சிறுவன் சீனிவாசனை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காலையில்தானே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள்... மாலையில் இறந்து விட்டாளே என்று சிறுமியின் உறவினர்கள் கதறி துடித்தது காண்போருக்கு வேதனை அளித்தது!