வேடசந்தூர் அருகே அண்ணனே தம்பியை அடித்து கொன்று விட்டு , விபத்தில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்தத வடமதுரை அருகேயுள்ள மோளப்பாடியூரை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன்கள் ஜான்பீட்டர் , அருள்ஸ்டாலின் இருவரும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். அருள்ஸ்டாலினுக்கு மரியபுஷ்பம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜான்பீட்டருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ஸ்டாலினுக்கும் மனைவிக்குமிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, மரியபுஷ்பம் கணவரை பிரிந்து மகள்களுடன் அதே பகுதியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த அருள்ஸ்டாலின் அண்ணன் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.
இந்நிலையில் , கடந்த 21-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற போது தவறி விழுந்து அருள்ஸ்டாலின் படுகாயமடைந்ததாக கூறி அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜான்பீட்டர் சேர்த்தார் .பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அருள்ஸ்டாலின் கொண்டு செல்லப்பட் டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனையில் ஆயுதத்தால் அருள் ஸ்டாலின்ள தாக்கப்பட்டிருந்ததும், அதனால் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. வடமதுரை போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஜான்பீட்டரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஜான் பீட்டர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, '' தன் மனைவி பிரிந்து செல்ல நான் தான் காரணம் என்று கூறி என்னிடம் அருள்ஸ்டாலின் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அவரை அடித்தேன். அதில் படுகாயமடைந்த அருள் ஸ்டாலின் இறந்துவிட்டார். இதையடுதது, அருள்ஸ்டாலின் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன் '' என்று போலீசாரிடம் ஜான்பீட்டர் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.