பட்டுக்கோட்டையில், கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் தனியார் மருத்துவமனை மீது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
புகாரை அடுத்து இறந்தவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சலீம், காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கொரோனா தொற்று பாதித்து அவர் இறந்துவிட்டதாகக் கூறி சலீமின் உடலை, மருத்துவமனை நிர்வாகம் கடந்த ஜூலை 29ஆம் தேதி அடக்கம் செய்துள்ளது.
ஆனால் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சுகாதாரத்துறை பட்டியலில் சலீமின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறிய குடும்பத்தினர், கே.ஜி. மருத்துவமனை உண்மையை மறைப்பதாகக் குற்றம்சாட்டி வந்தனர்.
உடல் உறுப்பு திருட்டுக்காக, மருத்துவமனை நிர்வாகம் உண்மையை மறைத்திருக்கலாம் எனக் கூறி, உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை கோரி பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலும் நடத்தியதோடு, துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்துள்ளனர்.
இருப்பினும், புகார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகக் கூறி, மீண்டும் மீண்டும் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா முன்னிலையில் சலீமின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழு, நிகழ்விடத்திலேயே இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தது. பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.