சென்னையில், போலி யானைத் தந்தங்கள் விற்று பண மோசடியில் ஈடுபட முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகக் காலணி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, எழும்பூர் கென்னெட் லேன் சாலையில் அமைந்துள்ள பாண்டியன் ஹோட்டலில் சிலர் யானைத் தந்தம் விற்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் பாண்டியன் ஹோட்டலுக்குச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது, இரண்டு அறைகளில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த வரதராஜ பெருமாள், பாபு, திருப்பதி, பூவரசன் ஆகிய நான்கு பேரை விசாரணை செய்தனர். அவர்களிடத்தில் இரண்டு தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. யானைத் தந்தங்களைப் பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது உண்மையான தந்தங்களா அல்லது போலியானதா என்று!
உடனடியாக வேளச்சேரி வனத்துறை திகாரிகளிடம் தந்தம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் இரண்டு தந்தங்களும் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி யானைத் தந்தங்களை எழும்பூர் காவல்நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.
போலி யானைத் தந்தங்களைத் தயாரித்தது எப்படி? அவற்றை யாருக்கு விற்கச் சென்னைக்கு கொண்டு வந்தனர்? போலி யானைத் தந்தங்களை வைத்து பண மோசடியில் ஈடுபட முயன்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.