கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல பரம்பிக்குளம், சோலையாறு அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலும், கேரள வனப்பகுதியிலும் பெய்த மழையால் பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 100 அடி உயர அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 1,600 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சோலையாறு அணை நிரம்பிய நிலையில், ஆழியார் அணையும் நிரம்பி உள்ளது. 120 அடி உயரம் கொண்ட அணை நிரம்பி உள்ளதால் , 5 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 2629 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் அடவி நயினார் கோவில் நீர் தேக்கம், கனமழையால் 2வது முறையாக நிரம்பியது. காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 45 கனஅடியாக இருந்த நிலையில், நீர்தேக்கத்துக்கு வரும் நீர் முழுவதும் கால்வாய் வழியே வெளியேற்றப்படுகிறது.
கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரி, குளங்கள் நிரம்பி, பில்லூர் தடுப்பணையையும் கடந்துள்ளது. இதனால் இந்த ஆற்று நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.