காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 45 ஆயிரத்து 668 கன அடியாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 668 கன அடியும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியும் காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 11 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், நாளை மாலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மேட்டூர் அணையின் நீர் வரத்து 11 ஆயிரத்து 241 கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், நீர் மட்டம் 90 புள்ளி 26 அடியாகவும் நீர் இருப்பு 52 புள்ளி 95 டிஎம்சியாகவும் உள்ளது.