ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே செல்போனில் ஆன்லைன் மூலமாக ஃபிரீபயர் வீடியோ கேம் விளையாடித் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ஹிருதிக் ரோஷன். இவர் கடலாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். பொழுதுபோக்கிற்காக தனது தந்தையின் செல்போனில் பிரீபயர் எனும் வீடியோ கேமை சிறுவன் அவ்வப்போது விளையாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹிருதிக்கின் தந்தை செந்தில்குமார் தனது வங்கிக்கு வழங்கிய செக் ஒன்று பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் தனது வங்கிக் கணக்கின் பரிவர்த்தனைகளை ஆராய்ந்துள்ளார். அதில், ஃபிரிபயர் எனும் ஆன்லைன் விளையாட்டிற்காக சுமார் 90ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில், இது குறித்து மகன் ஹிருதிக்கிடம் விசாரித்த போது, ஆன்லைனில் ஃபிரிபயர் விளையாடும் போது கட்டணமாக 300 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் என மொத்தம் 90ஆயிரம் ரூபாய் செலுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறான்.
இதற்காக தனது தந்தையின் ஏடிஎம் அட்டை விவரங்களை ஹிருதிக் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிபி மற்றும் பணம் எடுத்த விவரங்கள் தொடர்பான எஸ்எம்எஸ்களையும் ஹிருதிக் உடனடியாக தனது தந்தையின் செல்போனில் இருந்து டெலிட் செய்துள்ளான்.
இதனால் தான் வங்கி கணக்கில் இருந்து ஃபிரிபயர் விளையாட மகன் பணம் எடுத்த போதெல்லாம் அது குறித்து தந்தைக்கு தெரியாமல் இருந்துள்ளது.
எனவே பிள்ளைகளிடம் செல்போனை விளையாட கொடுக்கும் போது, ஆன்லைன் டிரான்ஸ்சாக்சன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாத வகையில் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை பெற்றோர் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் ஆன்லைனில் பணத்தை இழக்க வேண்டியது தான் என்கிறார்கள் சைபர் நிபுணர்கள்.