வீட்டுக்கே வந்து கடன் தருகிறோம் என்று கூறி வாடிக்கையாளர்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நாமக்கலில் இயங்கிய போலி கால் சென்டர் கும்பலை சேர்ந்தவர்களை கையும் களவுமாகச் சென்னை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடையாறு சைபர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ”கடந்த 9-ம் தேதி டாட்டா கேப்பிட்டல் என்ற நிறுவனத்திலிருந்து ஒரு பெண் பேசினார். தனிநபர் கடன் இரண்டு லட்ச ரூபாய் வரை ஆன்லைன் மூலமாகவே வழங்குவதாகத் தெரிவித்தார். அதை நம்பி ஆதார் ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினேன். அதன்பிறகு எனக்கு வந்த ஓ.டி.பி-யை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். உடனே, என் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் திடீரென திருடப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்பு கொண்ட அந்த செல்போன் சிக்னலை டிரேஸ் செய்து தேடுகையில் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கால் சென்டர் எண் என்பதும் என்று தெரியவந்தது. உடனே, சென்னை அடையாறு சைபர் பிரிவு போலீசார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விரைந்து, அந்த போலி கால் சென்டரை சுற்றி வளைத்தனர். அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த இளம் பெண்கள் மற்றும் கும்பலின் தலைவர்கள் குமரேசன் , விவேக் ஆகியோர் பிடிபட்டனர்.
விசாரணையில் ‘பெதர்லைட் டெக்’ என்ற பெயரில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 8000 முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் தருவதாக கூறி பலரையும் இந்த போலி கால் சென்டரில் பணி புரிய வைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் , பணிபுரியும் பெண்கள் பலரும் தெரிந்தும் தெரியாமலும் இந்த போலி கால்சென்டர் மோசடியில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து குமரேசன், விவேக் மற்றும் இங்கு பணி புரிந்த பெண்கள் உட்பட ஐந்து பேரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்கியில் நேரில் சென்று கடன் பெறுவதை தவிர்த்து, இது போன்ற நபர்கள் தரும் போலி வாக்குறுதியை நம்பி பணத்தை இழந்து விடாதீர்கள் என காவல் துறையினர் எச்சரிக்கின்றனர்.