நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போர்புரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தின் மூத்த சுதந்திரப் போராட்ட தியாகி ரெங்கசாமி தனது 93 - வது வயதில் மரணமடைந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி. 93 மூத்த சுதந்திர போராட்ட தியாகி ஆவார். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்த ரெங்கசாமி வெள்ளையருக்கு எதிரான போராட்டங்களில் பங்குபெற்றார். அதன்பிறகு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து செயல்பட்டார். பர்மாவில் உள்ள ரங்கூனுக்குச் சென்று ராணுவ பயிற்சியும் மேற்கொண்டார். பிறகு, 1939 ம் ஆண்டு முதல்1945 ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப்போரில் நாட்டுக்காகப் போர் புரிந்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்றும் நேதாஜியின் பிறந்த நாளின்போதும் தவறாமல் தேசியக்கொடி ஏற்றி வீர வணக்கம் செலுத்துவது ரெங்கசாமியின் வழக்கம். ரெங்கசாமியின் மனைவி பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சாலையில் தன் மகள் வீட்டில் வசித்தார். தற்போது, முதுமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.