கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் குளத்தில் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் தாயும் மகளும் இறந்த நிலையில் மற்போரு மகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை ஒழுகினச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் முருகன் - பங்கஜம் தம்பதியர். வடிவேல் முருகனுக்கு 80 வயதும், பங்கஜத்துக்கு 70 வயதும் ஆகிறது. வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு மாலா, சச்சு என்று இரண்டு மகள்கள் உள்ளனர். மாலாவுக்கும் சச்சுவுக்கும் வயது நாற்பதைக் கடந்துவிட்டாலும், வறுமை காரணமாகப் பெற்றோர்களால் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. நான்கு பேரும் கூலி வேலைக்குச் சென்று கிடைத்த பணத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இந்த சூழலில், கொரோனா ஊரடங்கால் தொழில்கள் முடங்கி வேலையிழந்த லட்சக்கணக்கானோரைப் போல வடிவேல் முருகன் குடும்பத்தினரும் வேலை இழந்து தவித்தனர். ஆறு மாதங்களாக வேலை இல்லாமல், சரியாக உணவு கிடைக்காமல் வாடிய வடிவேல் முருகன் நேற்றிரவு உயிரிழந்தார்.
உயிரிழந்த வடிவேல் முருகனுக்கு இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாத நிலையில் தவித்தனர் மூன்று பேரும். இதனால், வடிவேல் முருகனின் உடலை வீட்டில் படுக்கையிலேயே போட்டுவிட்டு, மூன்றுபேரும் ஒழுகினச்சேரியில் உள்ள இளைய நயினார் குளம் பகுதியில் உள்ள நல்லூர் குளத்துக்கு வந்தனர். அங்கு, மூன்று பேறும் மாற்றி மாற்றிக் கைகளைக் கட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள குளத்தில் குதித்தனர்.
தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து மூவரையும் மீட்ட போது தாயார் பங்கஜமும் மூத்த மகள் மாலாவும் உயிர் இழந்திருந்தனர். இளையமகள் சச்சு என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், “உணவுக்குக் கூட வழியில்லாமல் வறுமையில் வசித்துவந்தோம். துணையாக இருந்த தந்தையும் இறந்துவிட்டார். அதனால், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து கைகளைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்தோம்” என்று அழுதபடி கூறியுள்ளார். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019 ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!