சேலத்தில் ஆய்வகங்கள் தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டுவைத்துக் கொண்டு அறிகுறி இல்லாதவர்களையும் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் கொடுத்து மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கில் பெரும் அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கூடும் என்பதால் அரசு அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
அந்த வகையில் மக்கள் நலன் காக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மினிகிளினிக் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் சில தனியார் ஆய்வகங்கள், சில தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அரசின் உத்தரவை மீறி கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் தொற்றை உறுதி செய்ய சேகரிக்கப்படும் மாதிரிகளை 2 முறை சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஐசிஎம்ஆர், ஆரம்பத்தில் கொரோனா சோதனைக்கான கவுண்ட் வைரஸ் எண்ணிக்கையை 40 கவுண்டாக ஆக நிச்சயித்திருந்தது. அப்படி வழங்கப்பட்ட போது நிறையபேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் என ரிப்போர்ட் வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து தற்போது 25 கவுண்டுகளுக்கு மேல் வரும் முடிவுக்கு நெகடிவ் ரிப்போர்ட் வழங்க அறிவுறுத்தியுள்ள அரசு, சளி மாதிரிகளில் கொரோனாவின் அறிகுறிகள் தென்படும் வகையில் 25 கவுண்டுக்கு கீழ் வைரஸ் எண்ணிக்கை இருந்தால் மட்டும் கொரோனா பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வழங்க அறிவுருத்தி உள்ளது.
இந்த நிலையில், சேலத்தில், உள்ள தனியார் ஆய்வகங்கள் 25 கவுண்ட்டுகளுக்கு மேல் வந்தாலும் அவர்களுக்கு கொரோனா இருப்பதாக தவறான ஆய்வு முடிவுகளை வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. சேலத்தில் அரசு ஆய்வகங்களில் நடத்தப்படும் சோதனைகளில் 100 பேரில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் நிலையில், தனியார் ஆய்வங்கங்களில் அது 15 ஆக உள்ளதாக கணக்கு காட்டப்படுவதே இதற்கு சாட்சியாக உள்ளது.
இந்த தவறான ஆய்வு முடிவுகள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு வசதி படைத்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி லட்சங்களை வசூலிக்க வழி செய்து கொடுப்பதாக கூறப்படுகின்றது. இதற்காக சில ஆய்வகங்கள் நல்ல கமிஷன் அடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்த தகவல் பரவலாக வெளியான நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் , சம்பந்தப்பட்ட சில தனியார் ஆய்வகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனியார் ஆய்வகங்களுக்கு சோதனைக்கு வருபவர்களிடம் இருந்து 2 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒன்று அரசு ஆய்வகத்திலும், மற்றொன்று தனியார் ஆய்வகத்திலும் சோதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் பணத்திற்காக செய்யும் இது போன்ற செயல்களால் மனித நேயமிக்க மருத்துவர்கள் உள்ள மருத்துவத்துறைக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய போலி ஆய்வு முடிவுகளை வழங்கும் ஆய்வகங்களையும், தனியார் மருத்துவமனைகளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.