விவசாயிகள் தானாகப் பதிவு செய்யும் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதுதான், உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் முறைகேட்டுக்குக் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தவர், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திண்டிவனம் அருகே உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அரசு மருத்துவர்களின் அயராத முயற்சியால், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
உழவர் உதவித்திட்ட முறைகேடு தொடர்பாக பேசிய முதலமைச்சர், விவசாயிகள் தானாகப் பதிவு செய்யும் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதுதான் அதற்கு காரணம் எனக் குறிப்பிட்டார். முறைகேட்டில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 34 அலுவலர்கள் மீது வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.