தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் போலீசாரின் புலன் விசாரணையின் தரம் குறைந்து வருவதால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைந்து,விடுதலையாவது அதிகமாக நடப்பதாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஒருவர் , இந்த நிலை தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் அரங்கேறியுள்ள கொலை சம்பவங்களில் , பெரும்பாலானவற்றில் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைத்தது இல்லை.
கும்பலாக சேர்ந்து கொலை செய்தால் குறுக்கு விசாரணையில் சாட்சிகளை குழப்பி எளிதாக தப்பி விடலாம் என்ற பழைய பார்முலாவை கையில் வைத்துக் கொண்டு சுற்றும் ரவுடிகளுக்கு சட்டத்தின் படி உறுதியான தண்டனையை பெற்றுத்தர காவல்துறையினர் முனைப்புக்காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.
போலீசாரின் மெத்தனத்தால் கொலையாளிகள், சம்பந்தப்பட்ட கொலைவழக்குகளில் இருந்து சட்டத்தின் ஓட்டையில் புகுந்து எளிதாக தப்பிவிடுகின்றனர் என்ற ஆதங்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எப்போதும் உண்டு.
2010 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த செந்தில். என்பவரை சொத்து தகராறில் கொலை செய்ததாக பாலமுருகன் என்பவருக்கு சிவகங்கை நீதிமன்றம் 2014ல் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது.
இதை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி," இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒரு குற்ற வழக்கில் விசாரணை எப்படி நடைபெற வேண்டும் என்ற அடிப்படையே தெரியாமல், மெத்தனமாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்பவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார். இதனால் மனுதாரர் விடுதலை செய்யப்படுகிறார் என்று உத்தரவிட்டார் நீதிபதி புகழேந்தி.
மேலும் தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது. இந்த பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டிய நிதீபதி புகழேந்தி, தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் காவல் துறையினரின் புலன் விசாரணையின் தரம் குறைந்து வருகிறது.
இதனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது. இதே போல மெத்தனமான விசாரணை தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். என்று எச்சரித்தார்.
இதனால் இந்த வழக்கில் உள்துறை செயலர், டிஜிபி கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகள் முத்துக்குமார், பவுன் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்தும் உத்தரவிட்டார்.