சென்னை, ஆவடியில் சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது, பேருந்து விபத்தில் சிக்கிய முதியவரின் கால்கள் இரண்டும் நசுங்கிய நிலையில், மருத்துவ உதவி கிடைக்காமல் 45 நிமிடங்களுக்கு மேல் ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கிடந்தார். விபத்து நடந்து 45 மணி நேரத்துக்குப் பிறகு சாவகாசமாக வந்த 108 ஆம்புலன்ஸ் முதியவரை அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
ஆவடி, லாசர் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். 74 வயதாகும் முருகேசன் தன் மனையுடன் செங்குன்றத்திலிருந்து பூந்தமல்லிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். கோவர்த்தனகிரி பேருந்து நிறுத்தத்தில் நேற்றிரவு 7:00 மணியளவில் இரண்டு பேரும் கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவர் வந்த பேருந்தே சாலையைக் கடக்கப் பேருந்தின் முன்பக்கமாக நடந்து சென்ற முருகேசன் மீது மோதியது. ஓட்டுநரின் கவனக்குறைவால் சுமார் 30 அடி தூரத்துக்கு முருகேசனை பேருந்து இழுத்துச் சென்றது. இதில், முருகேசனின் கால்கள் இரண்டும் நசுங்கிப் போனது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனை மீட்ட பொதுமக்கள் சாலையோரம் இருந்த தடுப்பில் சாய்த்து உட்கார வைத்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், தகவல் கொடுக்கப்பட்டு 45 நிமிடங்களுக்கு மேலே ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. முருகேசனின்உடலிலிருந்து ரத்தம் தொடர்ந்து வெளியேறியதால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். 45 நிமிடங்களுக்கு பிறகே சாவகாசமாக வந்த 108 ஆம்புலன்ஸ் முருகேசனை ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்து நடந்த பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன!