தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அமலில் இருந்த தளர்வில்லா முழு ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இறைச்சி, காய்கறி கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கடந்த மாதத்துடன் இந்த முறை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அனைத்து வகை கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் காலை முதல் இறைச்சி கடைகளிலும், மீன் விற்பனை கடைகளிலும் குவிந்தனர்.
காசிமேடு பகுதியில் அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்தனர். அரசு வழிகாட்டுதல்களை காற்றில் பறக்கவிட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசங்கள் அணியாமலும் பொதுமக்கள் மீன்களை பேரம்பேசி வாங்கிச் சென்றனர். புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டி இறைச்சி சந்தையிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலைகளில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது.
சென்னையின் முக்கிய வணிகபகுதிகளில் ஒன்றான தியாகராயநகரிலும் வணிகவளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. திருச்சி ஸ்ரீரெங்கம் கோயில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் இன்று ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தினர்.
பழனியிலுள்ள புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயம் முன்பு கட்டங்கள் வரையப்பட்டு, அதனுள் போடப்பட்ட சேரில் கிறிஸ்தவர்கள் அமர்ந்து பிரார்த்தனை நடத்தினர்.
சேலம் அஸ்தம்பட்டி மற்றும் சூரமங்கலம் அன்னதானபட்டி பகுதியில் உள்ள உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதேபோல் அஸ்தம்பட்டி, சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு வந்திருந்த பலர் முக கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.
சேலம் அஸ்தம்பட்டி மற்றும் சூரமங்கலம் அன்னதானபட்டி பகுதியில் உள்ள உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதேபோல் அஸ்தம்பட்டி, சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு வந்திருந்த பலர் முக கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக தரையில் வரையப்பட்ட கட்டங்களுக்குள் நீண்ட தூரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
இதேபோல் புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. தேவாலயம் முன்பு கட்டங்கள் வரையப்பட்டு, அதனுள் போடப்பட்ட சேரில் கிறிஸ்தவர்கள் அமர்ந்து பிரார்த்தனை நடத்தினர்
மதுரையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. சமூக இடைவெளியும் பொதுவாக காணப்படவில்லை. இதேபோல் வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்டவைகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.முக்கிய சாலைகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கிறிஸ்தவர்கள் முகக்கவசம் அணிந்த நிலையில் பிரார்த்தனை நடத்தினர்.