விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு தப்ப முயன்ற, ஜே.சி.பி. வாகனத்தை 5 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்திலேயே விரட்டிச் சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
அச்சன்குளம் பகுதியில் உள்ள கடம்பன்குளம் கண்மாயில் சட்டவிரோதமாக சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் 3 பேர் அங்கு சென்றனர்.
இதனை அறிந்த அவர்கள் வாகனங்களுடன் தப்பியோட முயன்றனர். அப்போது விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் சினிமா பாணியில் தங்களது இருசக்கர வாகனத்திலேயே ஜே.சி.பி. வாகனத்தை விரட்டிச் சென்றனர்.
5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று ஜே.சி.பி. வாகனத்தை மடக்கி பிடித்த அதிகாரிகள், நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜே.சி.பி. ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டிராக்டர்களுடன் தப்பியோடிய
மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.