அரியர் மாணவர்கள் அனைவரையும் ஆல்-பாஸ் செய்யும் தமிழக அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ((ஏஐசிடிஇ)) மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஏஐசிடிஇ அப்ப எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மறுத்துள்ளார்.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதேபோல் அரியர் தேர்வுகளை எழுதுவதற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
தற்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அமைப்பான ஏஐசிடிஇ மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அதில் அரியர் தேர்வுகளை எழுதாமல் அப்படியே தேர்ச்சி வழங்குவது விதிகளின்படி தவறு, அதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா குறிப்பிட்டுள்ளார். தேர்வு எழுதாமல் அரியர் மாணவர்களை பாஸ் என்று அறிவித்தால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளதாகவும் சுரப்பா தெரிவித்துள்ளார்.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அமைப்பின் ( AICTE-இன்) விதியாக உள்ளதென்றும், அந்த அமைப்பின் மின்னஞ்சல் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் சுரப்பா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்க ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏஐசிடிஇ-டம் இருந்து எந்த மின்னஞ்சலும் தமிழக அரசுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் கிடைத்திருந்தால் அதை அவர் வெளியிட வேண்டும் எனவும் கூறிய அமைச்சர், தன்னுடைய சொந்த கருத்தை ஏஐசிடிஇ-ன் கருத்தாக துணைவேந்தர் திணிக்க முயற்சி செய்கிறார் என்றார்.
UGC மற்றும் AICTE-இன் விதிகளுக்கு உட்பட்டே அரசு முடிவு எடுத்துள்ளதால் தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.