நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் கடையை திறங்கய்யா கை உதறுது என்று கூறி கொதித்து எழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி பட்டிரோடு பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கடை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக கிராமப் பெண்கள் அறிவித்தனர். அதனால் 11 மணியாகியும் கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது.
கடை திறக்கப்படாமலேயே போய்விடுமோ என்ற அச்சத்தில் போராட்டத்தை அறிவித்த பெண்களுக்கு முன்பாகவே அங்கு குடிமகன்கள் ஒன்று திரண்டனர். ” 11 மணிக்கு மேலா கடையை திறக்க அனுமதி கொடுத்திருக்காங்க” என பிரச்சனையை தொடங்கி வைத்து ஒரு குடிமகன் மற்ற குடிமகன்களை உசுப்பேற்றினார்.
உடனே கடை அருகே கொத்தனார் வேலையில் ஈடுபட்டிருந்த மற்றொரு குடிமகன், “ கடையை ஏன் திறக்கலை ? எனக்கு கை உதறுது. நான் எங்கே போவேன் ?” என அங்கு வந்த ஒற்றை போலீசிடம் நியாயம் கேட்டு பொங்கி எழுந்தார்.
சிறிது நேரத்தில் டி.எஸ்.பி மற்றும் வேளாங்கண்ணி ஆய்வாளர் தலைமையில் கூடுதல் போலீசார் வரவே, குடிமகன்கள், மெல்ல அங்கிருந்து நடையைக் கட்டினர். தனியாக வந்த போலீசிடம் பொங்கி எழுந்த கொத்தனார், ஆய்வாளரைப் பார்த்ததும் ஒன்றும் தெரியாதவர் போல் மீண்டும் தன் வேலையை பார்க்கத் தொடங்கினார்.
பின்னர் அறிவித்தது போலவே டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் கலைந்து போகச் செய்தனர்.