செமஸ்டர் கட்டணம் செலுத்த "கெடு" விதித்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பேரிடரில் இருந்து மீள வழி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், இவ்வாறு கெடு விதிப்பதா? என அறிக்கையொன்றில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். B.E மற்றும் M.E படிக்கும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களும், எம்.எஸ்சி மாணவர்களும் செமஸ்டர் கட்டணத்தை 7 ஆம் தேதிக்குள் செலுத்தா விட்டால், பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என எச்சரித்திருப்பதை மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, செமஸ்டர் கட்டணத்தை இம் மாத இறுதி வரை செலுத்த, மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கால அவகாசம் வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.