சசிகலாவிற்காக போயஸ் தோட்டத்தில் பங்களா கட்டுப்பட்டு வரும் நிலையில், அந்த நிலம் பினாமி சட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது குறித்த நோட்டீசை வருமானவரித்துறையினர் அங்கு ஒட்டினர்.
பினாமி சட்டத்தின் படி சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்டதில் இந்த நிலமும் உள்ளது.
வருமான வரித்துறையால் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு அருகில் உள்ள இந்த நிலத்தில் பங்களா கட்டுமானப்பணிகள் எந்த தடங்கலும் இன்றி தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் இன்று ஒட்டப்பட்ட நோட்டீசில், 22 ஆயிரத்து 460 சதுர அடி உள்ள இந்த நிலம் குறித்த ஆதாரங்களை 90 நாட்களுக்குள் வழங்க இறுதி அவகாசம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சொத்தை வேறு யாரும் வாங்கவோ, விற்கவோ தடைவிதிக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட அவகாசத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், இடத்தை சீல் வைத்து கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.