இ- பாஸ் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு,கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்குத் தளர்வுகளை தொடர்ந்து, செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இதன்படி, இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ- பாஸ் நடைமுறை தொடரும்.
ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ- பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ- பாஸ் வழங்கப்படும்.
செப்டம்பர் 1 முதல் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவித்துள்ளது.
வருகிற 1 ஆம் தேதி முதல் சென்னை மாநகரில் பேருந்துகளும் இயங்கும். கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர்15 ஆம் தேதி வரை தொடரும். மாநிலங்களுக்கு இடையே அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்.
அனைத்துக் கடைகளையும் மேலும் ஒரு மணி நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், இனி, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, பார்சல் சேவை ஏற்கனவே உள்ளது போன்று, இரவு 9 மணி வரைத் தொடரும். வருகிற 1 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்.
தமிழகம் முழுவதும் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள், ஷோரூம்கள் திறக்க அனுமதி. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி.
கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு இ - பாஸ்பெற்று செல்லலாம். மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும். கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும். சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன்அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ள தமிழக
அரசு, சென்னை விமான நிலையத்தில், வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி அளித்துள்ளது. சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில், தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுகிழமைகளில் இனி, முழு முடக்கம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ள தமிழக அரசு, பொது இடங்களில் கண்டிப்பாக தனிநபர் இடைவெளி அவசியம் என்றும், பணிபுரியும் இடங்களில் ஊழியர்கள் அடிக்கடி சோப் போட்டு கை கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அவசிய தேவையின்றி, வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லக் கூடாது என்று பொது மக்களை, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.