பிரபல பாப்புலர் பைனானஸ் நிதி நிறுவன அதிபர் 2. 000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதோடு, தலைமறைவுமாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை தலைமையிடமாக கொண்டு கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த 1965 - ஆம் ஆண்டு முதல் இந்த நிதி நிறுவனம் 284 கிளைகளுடன் செயல்பட்டது.
பத்தனம் திட்டாவை சேர்ந்த டேனியல் ராய் மற்றும் அவரின் மனைவி பிரபா ஆகியோர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி வழங்கவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் திடீரென்று அடைபட்டு கிடந்தன
இதனால், முதலீடு செய்தவர்கள் பரிதவித்து போனார்கள். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 200- க்கும் மேற்பட்டவர்கள் பத்தனம்திட்டா மாவட்டம் கொன்னி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சுமார் 1500 முதலீட்டாளர்களிடத்திலிருந்து ரூ. 2,000 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பாப்புலர் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் டேனியல் ராய் மற்றும் அவரின் மனைவியை செல்போனிர் தொடர்பு கொண்ட போது, அவர்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து பத்தனம் திட்டா மாவட்ட எஸ்.பி சைமன் கூறுகையில், ''புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையை தொடங்கினோம். டெல்லி விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற டேனியல் ராயில் இரண்டு மகள்களை கைது செய்துள்ளோம் மற்றவர்களை தேடி வருகிறோம் '' என்று தெரிவித்துள்ளார்.
பாப்புலர் பைனான்ஸில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பலரும் பணம் திரும்ப கிடைக்குமா என்கிற பரிதவிப்பில் உள்ளனர்.