வியாபாரம், அரசியல், சமூக சேவை என உழைப்பின் முகவரியாய் திகழ்ந்த வசந்த் அண்ட் கோ அதிபர் எச். வசந்தகுமார் எம்.பி கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், நிமோனியா காய்ச்சலால் காலமானார். தடைகளை உடைத்து சரித்திரம் படைத்த வசந்தகுமாரின் சாதனை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சிரித்த முகம்... சிந்தனையில் தெளிவு... கொள்கையில் உறுதி... எப்போதும் விடாமுயற்சி.. என கடும் உழைப்பால் உயர்ந்த சாதனையாளர் வசந்த அண்ட் கோ அதிபர் வசந்தகுமார்..!
கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 1978ல் சென்னைக்கு வந்து சாதாரண விற்பனை பிரதிநிதியாக தனது வாழ்க்கையை துவக்கிய வசந்தகுமார் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது பெயரில் 412 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து, தான் நேர்மையாக வரி செலுத்தும் இந்திய குடிமகன் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்.
தன்னுடைய நிறுவனத்திற்கு தானே பிராண்ட் அம்பாசிடர் என்ற தன்னம்பிக்கையுடன் விளம்பரத்தில் தோன்றி வாடிக்கையாளர்களை கவர்ந்த வசந்தகுமார், வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரத்தில் முடியாது என்பதை எல்லாம் முடித்துக்காட்டியவர்.
தவணை முறை திட்டத்தையும், ஒரு ரூபாய்க்கு வீட்டு உபயோகப்பொருள் வழங்கும் மகத்தான திட்டத்தையும் அறிமுகப்படுத்தி நடுத்தர மக்களின் வீடுகளுக்கு தனது நிறுவனத்தின் மூலம் வீட்டு உபயோக பொருட்களை கொண்டு சேர்த்த இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்தகுமார்..!
வியாபாரமோ, அரசியலோ, சமூக சேவையோ எதிலும் முழு ஈடுபாட்டுடன் நல்லதை செய்வதால் தான் தனிமனிதனாக வெற்றிப்படிக்கட்டில் ஏறி வெற்றிக்கொடியை நாட்ட முடிந்ததாக தனது வாழ்க்கையின் தத்துவத்தை மிக எளிமையாக சொல்லியவர் எச். வசந்தகுமார்
ஏழைபள்ளிகுழந்தைகளின் கல்விக்கும், ஏழை எளிய விவசாய மக்களுக்கும் சத்தமில்லாமல் ஏராளமான உதவிகளை செய்து வந்தவர் எச். வசந்தகுமார். 2006 ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டும் நாங்குனேரி தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டிய எச்.வசந்தகுமார்.
2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் மூலம் அரசியலில் தான் மிகவும் நேசிக்கும் கர்மவீரர் காமராஜரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த அதே தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக டெல்லிக்கு செல்லும் தனது நீண்ட நாள் லட்சிய கனவை நனவாக்கினார் வசந்தகுமார்
அனைவரிடமும் நகைச்சுவை ததும்ப பேசும் பண்பாளரான வசந்தகுமார், தன்னை எம்.பியாக்கிய கன்னியாகுமரி தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் தவறியதில்லை
எந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டரோ, அதே கொரோனா பாதிப்புக்கு, வரும் முன் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை குறித்து கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் பேசியது தான் எச்.வசந்தகுமாரின் கடைசி நாடாளுமன்ற உரையாக அமைந்து போனது தான் சோகம்..!
தனி மனிதன் நினைத்தால் முடியாதது இல்லை என்பதை கடுமையான உழைப்பு மற்றும் தனது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை பயணத்தின் மூலம் உலகிற்கு உணர்த்தி சென்றுள்ள வசந்தகுமாரின் புகழ் என்றும் இம்மண்ணில் நிலைத்து நிற்கும்..!