தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு, வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 31ம் தேதியுடன் அரசு அறிவித்த ஊரடங்கு முடிவடையும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்பாக முதலமைச்சர் கருத்து கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பயணிப்போரை தடுக்கக் கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள முதலமைச்சர் பழனிசாமி இ பாஸின் அவசியம் குறித்து விளக்கியுள்ளார்.
எனவே இபாஸ் நடைமுறை நீடிக்க வேண்டுமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து இன்றையக் கூட்டத்திற்குப் பின்னர் முடிவெடுக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். அவர்கள் பரிந்துரைக்கேற்ப ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்தும் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.
பெரிய கோவில்கள் திறப்பு, பொதுப் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.