அடுத்த மாதத்தில் தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் உள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் கணிணி மையம் ஆக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு தேவையான பொருள்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
நகர்புறங்களில் ரேசன் கடைகளில் கூட்டம் அதிகரிப்பது, கடைகள் வாடகைக்கு கிடைக்காததை கருத்தில் கொண்டு நடமாடும் ரேசன் கடைகள் கொண்டு வரப்பட இருப்பதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். ரேஷன் கடைகளை மூடுவதற்கு திட்டமிடப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, போகிற போக்கில் குண்டைப் போட்டு விட வேண்டாம் என பதிலளித்தார்.
13 லட்சம் கிசான் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தங்கு தடையின்றி கடன் வழங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.